நெதர்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய எச்ஐவி வைரஸ் "VB வேரியண்ட்"

Keerthi
2 years ago
நெதர்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய எச்ஐவி வைரஸ் "VB வேரியண்ட்"

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில், புதிய வேரியண்ட்கள் ஏன் எப்போதும் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்பதற்கு வலுவான ஒரு ஆதாரமாக நெதர்லாந்து ஆய்வாளர்கள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன

குறிப்பாக, இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என புதிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இப்போது உலகெங்கும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் சூழலில் நெதர்லாந்து நாட்டில் புதிய வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருமாறிய கொரோனா வேரியண்ட் இல்லை, 1980களில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட எச்ஐவி தான். இதனிடையே நெதர்லாந்தில் பல ஆண்டுகளாகப் பரவி வந்த எச்.ஐ.வி-இன் மிகவும் கொடிய ஒரு வகை கண்டுபிடிக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். இருப்பினும், நவீன சிகிச்சை பலன்கள் காரணமாக இந்த புதிய எச்ஐவியை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக "சயின்ஸ்" ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், "VB வேரியண்ட்" என்று குறிப்பிட்ட வகை எச்ஐவி வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் ரத்தத்தில் மற்ற வகைகளால் பாதிக்கப்பட்டவர்களை விட 3.5 முதல் 5.5 மடங்கு அதிக அளவு வைரஸ்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை விரைவாக அழிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம் சிகிச்சையைத் தொடங்கிய பிறகு, VB வேரிண்ட்டால் பாதிக்கப்பட்ட நபரும் மற்ற எச்ஐவி வகைகளைக் கொண்ட நபர்களைப் போலவே நோயில் இருந்து குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட வேரியண்ட் வைரஸ் 1980களில் இறுதியில் அல்லது 1990களின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்றும் 2010களின் இறுதியில் இதன் பாதிப்பு குறையத் தொடங்கியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல இப்போது நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறைகள் இருப்பதால் இந்த புதிய வேரியண்ட்டை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எச்ஐவி தொற்றுக்கு என்ன தான் அதிநவீன சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட, ஒருவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மிக விரைவாக அதற்கான சிகிச்சை முறைகளைத் தொடங்க வேண்டும். இதற்கு எச்ஐவி நோயால் எளிதாக பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து சோதனை செய்து கொள்ள வேண்டும்.

எந்தவொரு வைரசும் உலகில் பரவிக் கொண்டே இருக்கும் போது, அது உருமாற்றம் அடையும் என்பதற்கு இது ஒரு ஆதாரமாகும். கொரோனா வைரசில் இப்படி தான் டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கொரோனா வகையாக உருவெடுத்தது. மேலும், வைரஸ் உருமாற்றம் அடையும் போது, அது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசாக மட்டும் மாறாது என்பதற்கும் இந்த மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எச்ஐவி ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதுவரை மொத்தம் 109 பேருக்கு இந்த புதிய VB வேரியிண்ட் எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் மட்டும் மேற்கு ஐரோப்பாவின் இதர நாடுகளில் உள்ளனர். மற்ற அனைவரும் நெதர்லாந்தில் உள்ளனர், 1992ஆம் ஆண்டில் எச்ஐவி கண்டறியப்பட்ட நபரில் இருந்து 2014இல் எச்ஐவி கண்டறியப்பட்ட நபர் வரை நெதர்லாந்தில் மட்டும் இதுவரை 105 பேருக்கு இந்த தீவிரமான VB வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து வைரஸ்களும் உருமாறும் என்றாலும் கூட எச்ஐவி மிக வேகமாக உருமாறும். அதாவது எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் சற்றே உருமாறிய வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும் இந்த VB வேரியண்ட்டில் மொத்தம் 500 பிறழ்வுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.